சிங்கப்பூரில் Work Permit பெறுவது எப்படி? – முழு வழிகாட்டி

Published: 24 Sep 2026, 4:18 PM |
How to get Singapore Work Permit

Singapore Work Permit: சிங்கப்பூரில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை நம்மில் அதிகமானோருக்கு இருக்கும், ஏனெனில் “சிங்கப்பூரில் சம்பளம் அதிகம் வாங்கலாம்” என்றும் “சீக்கிரம் செட்டில் ஆகிடலாம்” என்றும் அதிகமானோர் சொல்ல கேட்டிருப்போம்.

சிங்கப்பூரில் ஒர்க் பாஸ் (Work Pass) என்னும் வேலை அனுமதிகள் பல வகை இருந்தாலும் ஒர்க் பெர்மிட் (Work Permit) வேலை வேண்டும் என்றும் அதனை எப்படி பெறுவது என்றும் நமக்கு அதிகமான மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளன.

கட்டுமான துறை, உற்பத்தி துறை மற்றும் கடல்சார் துறைகளில் Unskilled வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பை பெற்றுத்தர இந்த ஒர்க் பெர்மிட் அனுமதி பயன்படுகிறது.

வாங்க ஒர்க் பெர்மிட் எப்படி apply செய்வது, தகுதிகள் மற்றும் தேவைகள் குறித்த விவரங்களை விரிவாக பார்ப்போம்.

நேரடியாக ஒர்க் பெர்மிட்க்கு விண்ணப்பிக்க முடியுமா?

இந்தியா உள்ளிட்ட தகுதியான நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் ஒர்க் பெர்மிட் அனுமதிக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

வேலைக்கு எடுக்கும் நிறுவனம் (employer) அல்லது நிறுவனம் நியமித்த அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் (agency) மூலமாக மட்டுமே ஒர்க் பெர்மிட் விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுருக்கமாக சொன்னால், முதலில் ஒரு நிறுவனம் நம்மை வேலைக்கு தேர்வு செய்ய வேண்டும், பின்னர் அவர்களே வேலை அனுமதிக்காக வேண்டி மனிதவள அமைச்சகத்திடம் (MOM) விண்ணப்பிப்பார்கள்.

ஊழியர்களின் தகுதிகள்

ஊழியர்கள் முக்கியமாக MOM பட்டியலிட்ட அங்கீகரிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பது அவசியம்.

பொதுவாக கட்டுமான துறைகளில் அதிகளவு வேலை இருக்கும், அந்த துறைக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

வயது வரம்பை பொறுத்தவரை, 18 வயது பூர்த்தியான வெளிநாட்டு ஊழியர்கள் ஒர்க் பெர்மிட்காக விண்ணப்பிக்க முடியும். துறைகளின் அடிப்படையில் 58 வயது வரை அனுமதிக்கப்படலாம்.

நிறுவனம் குறித்து பார்க்க வேண்டியது?

வேலைக்கு எடுக்கும் நிறுவனம் கண்டிப்பாக Accounting and Corporate Regulatory Authority (ACRA) ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். (பதிவு செய்யவில்லை என்றால் வேலைக்கு எடுக்கமுடியாது)

வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனத்துக்கு குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு (foreign worker quota) இருக்க வேண்டும்.

மேலும் MOM வரையறுத்துள்ள துறை சார்ந்த தேவைகளை நிறுவனம் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஒர்க் பெர்மிட் விண்ணப்பிக்கும் நடைமுறை

ஒருவரை ஒர்க் பெர்மிட் அனுமதியின்கீழ் வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனத்துக்கு Work permit online (WPO) கணக்கு தேவை.

நிறுவனம் தாமாகவோ அல்லது அது தேர்வு செய்த முகவர்கள் மூலமாகவோ அதனை விண்ணப்பிக்கலாம்.

இதில் வேலைக்கு எடுக்கும் ஊழியர்களின் விவரங்களை இணைத்து விண்ணப்பம் செய்வார்கள். வேலை கிடைத்து விட்டது என்றால் முதல்படியாக IPA என்னும் சிங்கப்பூர் வருவதற்கான ஒப்புதல் கடிதத்தை MOM வழங்கும்.

பிறகு உடல் தகுதி குறித்த மருத்துவ சோதனை (Medical check-up) கட்டாயம் இருக்கும், அதிலும் நாம் தேர்வாக வேண்டும்.

மேலும், கட்டுமான துறை உள்ளிட்ட சில துறைகளில் வேலை செய்ய Safety course கட்டாயம். அதனையும் நிறைவு செய்திருக்க வேண்டும்.

ஊழியர்களுக்கான செக்யூரிட்டி பாண்ட் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றையும் நிறுவனம் கட்டாயம் எடுக்க வேண்டும்.

சிங்கப்பூர் வருகை

அனைத்தையும் பூர்த்தி செய்து IPA-வுடன் சிங்கப்பூர் வரும் ஊழியர் கைரேகை/ புகைப்படத்துடன் பயோமெட்ரிக்ஸ் (biometrics) பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் ஒர்க் பெர்மிட் அட்டை வழங்கப்படும் (அதற்கான Validity 2 ஆண்டுகள் ஆகும்).

பின்னர், தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ஊழியரை நிறுவனம் தங்க வைக்கும்.

மேலும், ஊழியருக்கான மாதாந்திர தீர்வை (Levy) கட்டணத்தையும் நிறுவனமே செலுத்தும்.

சம்பளம்

S Pass, E Pass போன்ற உயர் வகை வேலை அனுமதிகள் போல் இல்லாமல் இந்த ஒர்க் பெர்மிட் அனுமதிக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படுவது கிடையாது.

இதற்கான சம்பளம், சந்தை நிலவரம் மற்றும் நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

நிறுவனம் ஒப்புக்கொண்ட சம்பளத்தை முறையாக ஊழியருக்கு வழங்க வேண்டும் என்பது MOM இன் விதிகளில் உள்ளது.

அட்டை புதுப்பிப்பு (renewal)

ஒர்க் பெர்மிட் அட்டையை renewal செய்துகொள்ள முடியும். அதனை உங்கள் நிறுவனம் அல்லது நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மூலமாக செய்யலாம்.

அதாவது காலக்கெடு முடியும் 7 முதல் 12 வாரங்களுக்குள் ஒர்க் பெர்மிட் அட்டையை renewal செய்து கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவை:

தனி நபரால் சிங்கப்பூரில் வேலை வாங்கி தர முடியாது என்பதை நினைவில்கொள்ளுங்கள். எனவே அதிக பணம் செலுத்தி முகவர்களிடம் ஏமாற வேண்டாம்.

சிங்கப்பூர் வரும் முன்னர் IPA கடிதத்தை பாஸ்போர்ட் தகவலுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவும்.

வேலைக்கு எடுத்த நிறுவனத்துக்காக மட்டுமே உங்களால் வேலை செய்ய முடியும்.

அதேபோல, ஒர்க் பெர்மிட் அனுமதிக்கு சார்பு அனுமதிகள் (Dependent Pass) கிடையாது, ஆகையால் குடும்பத்தை சிங்கப்பூர் அழைத்துவர முடியாது.

MOM விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

NTS இல் புதிய 8 வேலைகள் சேர்ப்பு

NTS என்னும் Non-Traditional Sources வேலை பட்டியலை மனிதவள அமைச்சகம் (MOM) விரிவுப்படுத்துகிறது.

அதன் அடிப்படையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியின்கீழ் செப்.1 2026 முதல் கூடுதலாக சில வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய மாற்றத்தின்கீழ், உணவுத் துறை, விமானப் போக்குவரத்து மற்றும் சமூக சேவை துறைகளில் ஒர்க் பெர்மிட் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.

NTS பட்டியலின்கீழ் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கட்டாய சம்பளமாக S$2,000 வழங்க வேண்டும் என்றும் MOM தெரிவித்துள்ளது.

விரிவான தகவலை படிக்க: செப்.1 முதல் இந்தியர்களுக்கு 8 புதிய வேலை வாய்ப்புகள்

இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். Singai Tamil – சிங்கப்பூர் தமிழ் மக்களுக்கான குரல்

சிங்கப்பூரில் வெயிலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டாய விதிகள்: டிச.1 முதல் – MOM அறிவிப்பு

சிங்கப்பூரில் Jaywalking குற்றம்.. மீறினால் அபாரதம் – புதிதாக வருவோர் அறிந்துகொள்ள வேண்டியவை!

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.