சிங்கப்பூரில் ஜேவாக்கிங் (Jaywalking) எனப்படும் விதிமுறைகளை மீறி சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு தற்போது விதிகள் கடுமையாக மாறியுள்ளன.
எனக்கென்ன என்று விதிகளை மதிக்காமல் சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு தற்போது S$50 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது.
இது போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
பாதசாரிகள், சாலைகளை கடக்கும்போது அருகிலுள்ள Pedestrian crossing பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில், பச்சை விளக்கு சிக்னல் போடப்பட்ட பின்னரே சாலையை கடக்க வேண்டும்.
Pedestrian crossing வசதி இருந்தும் அதை மதிக்காமல் சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு மட்டும் அது ஆபத்தாக முடிவதில்லை, அவர்களோடு சேர்த்து வாகன ஓட்டிகளுக்கும் அது பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உயிர் போகும் அபாயம் கூட இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஜேவாக்கிங் (Jaywalking) என்றால் என்ன?
பாதசாரிகள் கடக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் உள்ள pedestrian crossing என்னும் பாதசாரி கடவையை பயன்படுத்தாமல் சாலையை கடப்பதை ஜேவாக்கிங் என கூறப்படுகிறது.
Pedestrian crossing-ல் “சிகப்பு” விளக்கு எரியும் போது சாலையை கடப்பதும் ஜேவாக்கிங் ஆகும். அதில் Zebra கிராஸ்ஸிங், நடைபாலம் ஆகியவையும் அடங்கும்.
அபராதம்
ஜேவாக்கிங் செய்து சம்பவ இடத்திலேயே பிடிபட்டால் S$50 அபராதம் (Composition Fine) விதிக்கப்படலாம்.
கடந்த ஜூலை 13 அன்று, பூன் கெங் MRT அருகே போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் 10 jaywalkers பிடிபட்டனர், அவர்களுக்கு தலா S$50 அபராதம் விதிக்கப்பட்டது.
அதே போல, செராங்கூன் ரோடு பகுதியில் போக்குவரத்து காவல்துறை நடத்திய சோதனையில் 24 முதல் 80 வயதுக்குட்பட்ட 10 பேருக்கு தலா S$50 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விதிகளை மீறி சாலை குறுக்கே கடக்க முயன்ற சிலரை தடுத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சிக்னல் வசதியுள்ள பாதசாரிகள் crossing-ஐ பயன்படுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினர்.
மீண்டும் அதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படலாம்.
ஒருவர் ஜேவாக்கிங் செய்து விபத்தில் சிக்கினால்?
பொடுபோக்காக சாலையை கடந்து ஒருவர் விபத்தில் சிக்கினால், வாகன ஓட்டிகள் மீது மட்டுமின்றி, விதியை மீறி செயல்பட்ட அந்த பாதசாரி மீதும் சட்டப்படி குற்றம் சுமத்தப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
சிங்கப்பூர் காவல்துறை பாதசாரிகளுக்கு வழங்கிய அறிவுரைகள்
- பாதசாரிகள் Pedestrian crossings பகுதிகளையே எப்போதும் பயன்படுத்துங்கள். ஜேவாக்கிங் செய்வதைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
- Zebra Crossing பாதை, சுரங்கப்பாதை, மேம்பாலம் (Overhead bridges) மற்றும் போக்குவரத்து சிக்னல் ஆகிய வசதிகளை பயன்படுத்துங்கள்.
- சாலையில் நடந்து செல்லும்போது கைபேசி பயன்படுத்தி உங்களின் கவனத்தைச் சிதறவிடாதீர்கள்.
- நடைபாதை (Footpath) வசதி இருக்கும்பட்சத்தில் அதை எப்போதும் பயன்படுத்துங்கள்.
- வளைவான சாலை ஓரங்களில் ஒருபோதும் கடக்காதீர்கள். ஏனெனில் எதிரே வரும் வாகனங்களைப் பார்க்க முடியாமல் போகலாம்.
- ‘சிவப்பு’ சிக்னல் போடும்போதும், ‘பச்சை’ சிக்னல் மினுமினுக்கும்போதும் சாலையைக் கடக்காதீர்கள்.
Image from Unsplash