சிங்கப்பூரில் இனி வெயில் சுட்டெரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஊழியர்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க கட்டாய நடைமுறைகளை மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் டிச.1 முதல் நடப்புக்கு வரும் எனவும் MOM கூறியுள்ளது.
முதலாளிகள் கட்டாயம் செய்ய வேண்டியவை குறித்து MOM வெளியிட்டுள்ள நடைமுறைகளை வரிசையாக பார்ப்போம்.
1. குளிர்ந்த நீர்
முதலாளிகள், தங்கள் ஊழியர்கள் வேலை செய்யும் இடங்களிலேயே குளிர்ந்த குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. பொருத்தமான உடைகள்
வெப்பத்தை தணிக்கும் வகையில் ஊழியர்களுக்கு தளர்வான, வியர்வையை எளிதில் உறிஞ்சக்கூடிய அல்லது நல்ல காற்றோட்டமான ஆடைகளை வழங்க வேண்டும்.
3. அவசரகால குளிர்விப்பான்கள்
வெப்பத்தால் உடல்நிலை ஏதும் பாதிக்கப்படும் சூழலை கருத்தில் கொண்டு வேலை இடத்தில் ஐஸ் பொட்டலங்கள் (ice packs) அல்லது நீர் தெளிக்கும் கருவிகள் (water spray) போன்றவை தயாராக இருப்பதை இனி முதலாளிகள் உறுதி செய்வது கட்டாயம்.
4. வெப்ப பாதுகாப்பு பயிற்சி
அதிக வெப்பத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இந்த வெப்பத்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும், அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மேலும் அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி போன்ற பயிற்சிகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
விதிகளை மீறினால் அபராதம் / கடும் அமலாக்க நடவடிக்கை பாயலாம்
மேற்கண்ட பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத முதலாளிகள் மீது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது வேலை நிறுத்த உத்தரவு (Stop-Work Order) போன்ற கடும் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற எச்சரிக்கையையும் MOM வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நடப்பில் உள்ள விதிகள்
- புதிதாக வேலைக்கு வரும் ஊழியர்களை படிப்படியாக வெப்பத்துக்கு பழக்கப்படுத்துதல்
- ஒவ்வொரு மணிநேரத்துக்கும் Wet Bulb Globe Temperature என்னும் வெப்ப பாதிப்பு சோதனை செய்தல்
- முறையான தண்ணீர் பருகுவதை உறுதி செய்தல்
- நிழலில் ஓய்வு எடுப்பது
- வெப்பத்தால் உடல்நல குறைவு ஏற்பட்டால் அவசர நடவடிக்கை மேற்கொள்ளுதல்
நிழலான குளிரூட்டப்பட்ட ஓய்வு இடம் பரிந்துரை
வரும் டிச.1 முதல் வெளிப்புறத்தில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு நிழலான நல்ல காற்றோட்டமான, முடிந்தால் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய ஓய்வு இடத்தை அமைத்துத்தர முதலாளிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வெப்ப உடல்நல குறைவு (Heat Stress) ஆபத்தானது?
அதிகப்படியான வெப்பம் காரணமாக கடந்த 2023 முதல் 2025 வரை, 6 உடல்நல குறைவு சம்பவங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன என்றும் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றும் MOM கூறியுள்ளது.
வெளிப்புறத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக தண்ணீர் குடிப்பது, ஆடைகளை இறுக்கமாக அணிவதை தவிர்ப்பது, நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பது போன்றவற்றை கட்டாயம் பின்பற்றுங்கள். ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூரில் MOM வகுத்துள்ள சம்பளம் தொடர்பான விதிகள் அறிந்து கொள்ள வேண்டுமா? சம்பள விதிகள்
இதுபோன்ற MOM அறிவிப்புகளை துல்லியமாக அறிந்துகொள்ள இணைந்திருங்கள்!