சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள பாரம்பரிய தென்னிந்திய உணவகம் கோமள விலாஸ் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
சிராங்கூன் சாலையில் அமைந்திருந்த கோமள விலாஸ் உணவகம் இருந்த இடத்தில் புதிதாக நகைக்கடை ஒன்று வரப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் ஏற்கனவே சிராங்கூன் சாலையில் இயங்கி வரும் இஷ்தாரா ஜுவல்லரி (Ishtara Jewellery) தனது புதிய கிளையை அந்த இடத்தில் திறக்க போகிறது என்ற அதிகாரபூர்வ தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இஷ்தாரா ஜுவல்லரியின் இரண்டாவது புதிய கிளை அங்கு திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பாரம்பரிய இடம் கிடைத்தது அதிஷ்டம்
இஷ்தாரா ஜுவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்திபன் முருகையன் கூறுகையில், அந்த பாரம்பரிய இடம் கிடைத்தது எங்களின் அதிஷ்டம் என குறிப்பிட்டார்.
மேலும், லிட்டில் இந்தியாவில் எங்களின் நிறுவனத்தை இது வலுப்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.
79 ஆண்டுகள் பழமையான உணவகம்
1947 ஆம் ஆண்டு முருகையா ராஜூ என்பவர் கோமள விலாஸ் உணவகத்தை தொடங்கினார்.
தமிழ்நாட்டு மக்களின் ஆக பிரியமான உணவான தோசை மற்றும் பிரியாணி உள்ளிட்ட சைவ உணவுகள் வாடிக்கையாளர்கள் அங்கு விரும்பி உண்டு வந்தனர்.
இதன் இரண்டாவது கிளை 291-செராங்கூன் சாலையில் உள்ளது. மேலும் அப்பர் டிக்சன் சாலையில் இனிப்புகள் அடங்கிய சிற்றுண்டி கடையையும் அந்நிறுவனம் தொடங்கியது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய சிங்கப்பூர் பிரதமர்லீ சியன் லூங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் அந்த உணவகத்தில் உணவருந்திய வரலாறுகளும் உண்டு.
மூடல்
76 to 78 செராங்கூன் சாலையில் உள்ள அதன் முதல் கிளை புதுப்பிப்புப் பணிகளுக்காக வேண்டி கடந்த ஜனவரி 19 முதல் மூடப்பட்டிருந்தது.
பல மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அந்த இடத்தில் வேறு கடை வரப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் இரண்டாவது கிளையையும் இன்னொரு இந்திய சைவ உணவகம் கைப்பற்றிவிட்டது. மேலும் அப்பர் டிக்சன் சாலையில் இயங்கி வந்த சிற்றுண்டி இனிப்பு கடையும் நிரந்தரமாக மூடப்பட்டது.
வாடிக்கையாளர்கள் கருத்து
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, அதன் வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
“லிட்டில் இந்தியாவின் அடையாளம் அது” என்றும் “இன்னொரு அடையாளத்தை நாம் இழந்துவிட்டோம்” என்றும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.
உணவகத்தின் நினைவுகளை பலர் வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
“சிறு வயதில் இருந்து அங்கு சாப்பிட்டு வருகிறோம்”…. என்றும்
“எந்த தகவலும் இல்லாமல் கடை மறைந்துவிட்டது”… என்றும்
“மறைந்த என் தந்தை அமர்ந்து சாப்பிட்ட பல நினைவுகள் அங்கு இருக்கிறது”… என்றும் பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதுபோன்ற சிங்கப்பூர் செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
53 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கிய இந்திய மசாலைக் கடை மூடல் – உரிமையாளர் கலாநிதி ஓய்வு
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய Singpass Passkey வசதி அறிமுகம்