சிங்கப்பூரின் பிரபல இந்திய பாரம்பரிய வணிகமாக விளங்கிய “Kalanidi Curry Spices” என்ற கடை 53 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படுவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
அதன் 2ம் தலைமுறை உரிமையாளரான 75 வயதுமிக்க ஏ.கே. கலாநிதி (A.K. Kalanidi) இந்த இந்திய மசாலா கடையை தெம்பனீஸ் ரவுண்ட் மார்க்கெட் மற்றும் புட் சென்டரில் நடத்தி வந்தார். அவர் ஓய்வு பெறுவதை ஒட்டி கடையை மூட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
கடைசியாக தனது கடையில் இருக்கும்படி வாடிக்கையாளர் ஒருவர் எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் Facebook-ல் பதிவிட்டுள்ளார்.
கடந்த 53 ஆண்டுகளாக தாம் நடத்திவந்த இந்த தொழிலை தற்போது மூடப்போவதாகவும், இத்தனை ஆண்டுகாலமாக தன்னை ஆதரித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தாம் மகிழ்ச்சியுடன் நன்றியை கூறிக்கொள்வதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
1973ல் தொடங்கப்பட்ட கடை
தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் கடையை தாமே ஏற்று நடத்துவதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு. கலாநிதியின் இந்த பயணம் 1973 ஆம் ஆண்டு தொடங்கியது.
அச்சமயம் அவருக்கு வேறு தொழில்கள் இருந்தபோதும் தந்தையின் தொழிலை தொடர்வதையே அவர் விரும்பினார்.
பின்னர் அந்த கடை 1983ஆம் ஆண்டு தெம்பனீஸ் ரவுண்ட் மார்க்கெட் மற்றும் புட் சென்டருக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து சுமார் 43 ஆண்டுகள் அதே இடத்தில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வரிசைகள்
வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமான இந்த கடையின் முன்பு அநேக நாட்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
அவரின் கைவண்ணத்தில் உருவான கறி மசாலா விழுதுகள் மற்றும் பாரம்பரிய மசாலா கலவைகளை வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் இருக்கும்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் கூட இந்த கடையின் ஒரு வாடிக்கையாளர் என்றே கூறலாம். ஏனெனில், கடந்த ஏப்ரலில் அந்த மார்க்கெட்டுக்கு சென்றபோது திரு. வோங், Kalanidi Curry Spices கடைக்கும் சென்றிருந்தார்.
சிங்கப்பூரின் ஆரம்பகால மசாலா வல்லுனர்களுள் திரு. கலாநிதியும் ஒருவர் என சக போட்டி நிறுவனங்களே கூறும் அளவிற்கு அவரின் புகழ் எங்கும் பரவி இருந்தது.
வாடிக்கையாளர்கள் கவலை
தனக்கு பிடித்தமான இந்த மசாலா கடை மூடப்படுவதை அறிந்த வாடிக்கையாளர்கள் பலர் கவலையில் மூழ்கினர்.
தங்களால் இனி கறி விழுதை (curry paste) வாங்க முடியதா? என்று பலர் கவலை தெரிவித்தனர்.
மேலும், சிலர் “Happy retirement uncle… உங்களை மிஸ் செய்வோம்” என்றும் கருத்து கூறினர்.
சிலர், “கடை மூடல் தெரியாது என்றும்.. கடைசி நாளில் கடைக்கும் செல்ல முடியாமல் போனதற்கும் வருத்தம்” தெரிவித்தனர்.
PHOTO: Ministry of Digital Development and Information