தென்காசியை சேர்ந்த ஊழியர் சிங்கப்பூரில் கொலை.. “மகனின் கொலைக்கு நீதி வேண்டும்” – கண்ணீரில் குடும்பம்

Published: 1 Sep 2026, 4:24 PM |
Posted By: Editor
Raj Maheshkumar Singapore

தமிழ்நாடு: சிங்கப்பூரில் ராஜ் மகேஷ்குமார் (29) என்ற ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முருகநாதன் கதிர்வேல் (25) என்ற ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது குறித்து நம் “சிங்கை தமிழ்” தளத்தில் நேற்று (ஆக.31) செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், உயிரிழந்தவர் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்த ராசு என்பவரின் மகன் ராஜ் மகேஷ்குமார் என்பதும் அவர் டிப்ளமோ பொறியியல் படிப்பு முடித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் 2 ஆண்டுகளாக வேலை செய்து வரும் மகேஷ்குமாருக்கு திருமணமாகி செலின் என்ற மனைவியும், 7 மற்றும் 5 வயதில் மதிமாறன் மற்றும் சதீஷ்மாறன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (ஆக.29) இரவு ராஜ் மகேஷ்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரின் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவலில் கூறப்பட்டது, எனினும் இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல.

கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை

இந்த கொலைக்கான காரணம் குறித்த எந்த தகவலையும் சிங்கப்பூர் போலீசார் இதுவரை வெளியிடவில்லை. இந்த சம்பவத்தில் கைதான முருகநாதன் கதிர்வேல் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்டார்.

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று, கதிர்வேல் மீதான அடுத்த விசாரணை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்தினர் வேதனை

மகேஷ்குமாரின் தாய் மாலதியை தொடர்பு கொண்ட தனியார் நிறுவனம், அவர் இறந்த செய்தியை தெரிவித்ததாகவும், அவரது உடல் நாளை (செப்.2) திருச்சி விமான நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

“என் மகன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. அவரது (மகேஷ்குமாரின்) உடலுடன் சேர்த்து கைப்பேசியையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்னுடைய மகனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று தாய் மாலதி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

உடலை சொந்த ஊர் கொண்டுவர கோரிக்கை

இந்நிலையில், மகேஷ்குமாரின் பிரேத உடலை சொந்த ஊர் கொண்டு வர வேண்டும் என்று அவரின் பெற்றோர்களும் உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

புதுப்பிப்புகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைப்பில் இருங்கள் சிங்கப்பூர் செய்திகள் உடன்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel