சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளை சட்டவிரோதமாக வாடகைக்கு விடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பரபரப்பான லிட்டில் இந்தியாவில் உள்ள செராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள கடைவீட்டின் (shophouse) 2வது மற்றும் 3வது மாடிகள் சட்டவிரோத தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், அந்த 2 மாடிகளில் உள்ள 10 அறைகளில் சுமார் 36 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு 37 பேர் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
அந்த மாடிக்குள் மக்கள் வந்து செல்வதை அப்பகுதியில் பணிபுரிவோர் கவனித்து வந்துள்ளனர், அவர்கள் காலையில் வேலைக்கு சென்று இரவு நேரங்களில் மீண்டும் அங்கு வந்துள்ளனர்.
அங்கு சட்டவிரோத தங்குமிடம் இருந்தது மறைக்கப்பட்டதாகவும், மேலும் படுக்கைக்கு தேவையான bedframes மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றை யாருக்கும் தெரியாமல் பின் வழியாக மாடிக்கு எடுத்து சென்றதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் (URA) விதிகளை மீறி, அந்த இடத்தை சட்டவிரோத தங்கும் விடுதியாக மாற்றிய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு S$90,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சட்டவிரோதமான தங்குமிட சம்பவங்கள் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு URA மேற்கொண்ட அதிரடி சோதனையில் 534 சட்டவிரோதமான தங்குமிட சம்பவங்கள் விசாரிக்கப்பட்டது. அது கடந்த 2025 ஆம் ஆண்டில் 544 ஆக அதிகரித்தது.
இந்த 2026ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டும் சுமார் 278 சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
Short-term accommodation என்னும் குறுகியகால தங்குமிடம்
அது ஒருபுறம் இருக்க, சட்டவிரோத குறுகியகால தங்குமிடங்கள் தொடர்பிலான சந்தேக வழக்கு விசாரணைகளும் அதிகரித்துள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டில் 200 ஆக இருந்த சட்டவிரோத குறுகியகால தங்குமிடங்கள் தொடர்பான விசாரணைகள் 2025-ல் 219 ஆக உயர்ந்தன.
2026 ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டும் 58 சம்பவங்கள் அது தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் விளம்பரம்
சட்டவிரோத தங்குமிடங்கள் தொடர்பான விளம்பரங்கள் சமுக ஊடங்கங்கள் வழியே பரவி வருகின்றன என கூறப்பட்டுள்ளது.
மேலும், குறுகியகால தங்குமிட வாய்ப்புகள் இவ்வழியாக விளம்பரம் செய்யப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் சேர்ந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே இவ்வாறான சட்டவிரோத தங்கும் விடுதிகளை ஒழிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.