லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல் மசாஜ் நிலையங்களை நடத்திய 26 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா, பீச் ரோடு, மேக்பர்சன் ரோடு, செராங்கூன் கார்டன் மற்றும் பாலஸ்டியர் ரோடு ஆகிய பகுதிகளில் முறையான உரிமங்கள் இல்லாமல் 5 மசாஜ் நிலையங்களை அவர் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
உரிமம் இல்லாமல் மசாஜ் நிலையம் நடத்தியது, தீ சம்பவம் ஏற்படும் அபாயத்தை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் அவர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது என்று SPF செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள மசாஜ் நிலையங்களில் காவல்துறை அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது, செல்லுபடியாகும் முறையான உரிமங்கள் இல்லாமல் 5 மசாஜ் நிலையங்களை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் 2021 ஆம் ஆண்டு அட்மிரல்ட்டி பகுதியில் நடந்த ஒரு தீ சம்பவத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
தண்டனை
செல்லுபடியாகும் முறையான உரிமங்கள் இல்லாமல் மசாஜ் நிலையங்களை நடத்திய குற்றம் நிரூபணமானால் அதிகபட்சமாக S$10,000 அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அதே குற்றத்தை மீண்டும் செய்தால் அதிகபட்சமாக S$20,000 அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.