சிங்கப்பூர் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் அமைந்துள்ள கடை ஒன்றிலிருந்து ஸ்பீக்கர் சாதனத்தை ஆடவர் ஒருவர் எடுத்து சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடையை சுற்றிமுற்றி பார்த்த அந்த ஆடவர் யாரும் இல்லாத நேரத்தில் லாவகமாக ஸ்பீக்கர் சாதனத்தை எடுத்தது கடையின் CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.
பின்னர், அதை ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு கடையை விட்டு அவர் வெளியேறியதும் அதில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் செப்.16-ம் தேதி பிற்பகல் 2 மணிவாக்கில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பான CCTV காணொளி Top One Communication என்ற Tiktok பக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இது குறித்த செய்தியை மதர்ஷிப் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் கூறப்பட்டுள்ளதாகவும் , காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் எடுத்து செல்வது திருட்டு ஆகுமா?
அண்மைய காலமாக கடைகளில் நடக்கும் திருட்டு சம்பவம் தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது.
இதற்கு முன்னர் லிட்டில் இந்தியாவில் உள்ள கடையில் தொடர் திருட்டு குறித்து ஊழியர் ஒருவர் விரக்தியில் பேசிருந்த செய்தி வெளியானது.
சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் பொருட்களை திருடி வெளிநாட்டினர் அதிகமானோர் பிடிபடும் செய்திகளையும் அதிகம் படித்திருப்போம்.
சிங்கப்பூரில் பிறருடைய பொருளை அவர் அனுமதியின்றி நேர்மையற்ற முறையில் எடுத்துச் செல்வது திருட்டு குற்றமாக பார்க்கப்படும்.
திருட்டு குற்றம் நிரூபணமானால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.