சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய ஊழியரின் தொலைந்த பணப்பையை கண்டுபிடிக்க உதவியதுடன் பணமில்லாமல் தவித்தவருக்கு தன்னுடைய சொந்த பணம் கொடுத்து உதவிய இந்திய பேருந்து ஓட்டுனரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூர்யா (28) இங்கு கட்டுமான ஊழியராக வேலை செய்து வருகிறார்.
என்ன நடந்தது?
கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 10.50 மணிக்கு புகிஸ் பகுதியில் SMRT பேருந்தில் ஏறிய சூர்யா, இரவு 11.30 மணியளவில் காமன்வெல்த் டிரைவ் பகுதியில் வந்திறங்கினார்.
பின்னர் தங்கும் இடத்துக்கு திரும்பிய சூர்யா, 20 நிமிடங்களுக்கு பிறகு தான் தன்னுடைய பர்ஸை காணவில்லை என்பதை உணர்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வது என்றறியாமல் தவித்தார்.
கையில் காசு இல்லாமல் தவித்த சூர்யா
மறுநாள் பேருந்து நிறுத்தம் சென்று சுற்றிமுற்றிலும் தேடி பார்த்தும் பர்ஸ் கிடைக்கவில்லை, பேருந்தில் ஏறிச் செல்லக்கூட கையில் பணமில்லாமல் தவித்துள்ளார் சூர்யா.
காலை 8 மணிக்கு பேருந்து எண் 61-ல் ஏறிய சூர்யா தனது நிலையை பேருந்து ஓட்டுநரிடம் எடுத்து கூறினார். கையில் காசு இல்லாமல் தவித்த சூர்யாவுக்கு கடவுள் அனுப்பியது போல வந்த பேருந்து ஓட்டுநர் சுரேஷ் குமார் சுப்பையா தன் சொந்த 10 வெள்ளி பணத்தை கொடுத்து உதவினார்.
பயணச் செலவுக்காக மட்டுமின்றி உணவு மற்றும் பானம் அருந்த உதவியாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் சுரேஷ் குமார் கூடுதலாக பணம் கொடுத்து உதவியுள்ளார்.
வழிகாட்டல்
அதோடு நிறுத்திக்கொள்ளாத சுரேஷ் குமார், பர்ஸை எப்படி கண்டெடுக்க முடியும், அதற்காக எங்கு செல்ல வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் சூர்யாவிடம் கூறினார்.
அவரின் அறிவுறுத்துதலின்படி, காலை 10 மணிக்கு சுவா சூ காங் முனையத்தை அடைந்த சூர்யா, அடையாளங்களை கூறி பர்ஸை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்த நல்லுள்ளம்
அதன் பின்னர், பிற்பகல் நேரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த சூர்யாவை பார்த்து சுரேஷ் குமார் ஹாரன் அடிக்க, அதற்கு சூர்யா மகிழ்ச்சியில் கையசைத்து சிரித்தார்.
தன்னுடைய வாழ்க்கையில் மிக கடுமையான நேரத்தில் இருந்த எனக்கு இந்த உதவி பெரும் ஆறுதலாக அமைந்ததாக சூர்யா விளக்கினார்.
இருட்டில் ஒளி ஏற்றியதுபோல அமைந்த இந்த உதவி, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்ததாக சூர்யா நெகிழ்சியுடன் கூறினார்.
ஓட்டுநர் சுரேஷின் மனிதநேயச் செயலைப் பாராட்டிய SMRT பேருந்து நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கே, பயணிகளின் மீது அவர் காட்டிய அன்பும் அக்கறை கலந்த பொறுப்புணர்வு பெருமைக்குரியது என்று பாராட்டினார்.
இதுபோன்ற வெளிநாட்டு ஊழியர்களின் செய்திகளை துல்லியமாக தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…