சிங்கப்பூர் விபத்தில் சிக்கி 73% தீக்காயம்… 3 மாதங்கள் கோமா: சொந்த ஊரில் பள்ளிகளை கட்டிய “பங்களாதேஷ் ஊழியர்” – நெகிழ்ச்சி கதை

Published: 5 Sep 2026, 4:41 PM |
Rahman Mohammad Ataur, Bangaladeshi worker

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த கோர வெடி விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட முக்கால்வாசி தீக்காயங்களுடன், 3 மாதம் கோமாவில் இருந்த பங்களாதேஷை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் தன் சொந்த ஊரில் ஏழை குழந்தைகளுக்காக பள்ளிகளை உருவாக்கி வருகிறார்.

ரஹ்மான் முகமது அதவுர் என்ற அந்த பங்களாதேஷ் ஊழியர் தன்னுடைய 20 வயதில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தார், அடுத்த சில ஆண்டுகளில் அவரின் வாழ்க்கையே மாறி போனது.

கோர விபத்தில் சிக்கிய பங்களாதேஷ் ஊழியர்

2016 ஜூலை 25 அன்று.., 21 வயதான ரஹ்மான் நிலத்தடி தொட்டியை சுத்தம் செய்ய கீழே இறங்கினார், போதிய வெளிச்சம் இல்லாததால் ஒரு விளக்கை எடுத்து கொண்டு சென்ற சில நொடிகளில் பலத்த வெடிப்பு சத்தம் கேட்டது.

20 வயதில் ரஹ்மான் முகமது அதவுர்

இதில் தூக்கி வீசப்பட்ட ரஹ்மான் கடுமையான காயங்களுக்கு ஆளானார், பார்வை தெரியாமல் நிலை தடுமாறிய ரஹ்மானை சக ஊழியர்கள் மேல தூக்கி வந்தனர்.

அவரின் அறைத் தோழர், “யார் நீ..?” என்று கேட்கும் அளவிற்கு ரஹ்மானின் உடல் தீக்காயங்களால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளானதை நம்மால் உணர முடிகிறது.

முக்கால்வாசி தீக்காயம்

ரஹ்மான் உடல் 73 சதவீதம் தீக்காயங்களுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. அதாவது அவரின் கண் இமைகள், புருவங்கள், மூக்கு, உதடுகள் மற்றும் காதுகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

சுமார் 3 மாதங்கள் செயற்கை கோமாவில் (induced coma) இருந்த ரஹ்மான், அதன் பின்னரும் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வாரத்தில் 2 அல்லது 3 முறை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சேதமடைந்த முகம் மற்றும் காது பகுதிகளுக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் தோல் எடுத்துவைக்கப்பட்டது.

சவாலாக மாறிய வாழ்க்கை

2017 ஜனவரி மாதம் ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கையில் ஒரு பொருளைக்கூட எடுக்க முடியாமலும் சுயமாக நடக்க முடியாலும் அவர் கடும் சவாலை சந்தித்தார்.

அச்சமயம் கடவுளின் அருள் கிடைத்தது போல, வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் HOME அமைப்பின் மூலம் கிறிஸ்தவ தன்னார்வலர் ஒருவரை அவர் சந்தித்தார்.

அந்த சந்திப்பு பலருடன் நெருக்கமாக பழக அவருக்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் பயனாக அவருடைய மேல் மருத்துவ செலவுகளுக்கும் வாழ்க்கை செலவினங்களுக்கும் நிதி திரட்ட முடிந்தது.

தன்னுடைய முன்னாள் முதலாளிகள் மீது கோபத்தில் இருந்த ரஹ்மானுக்கு சிங்கப்பூர் உறவுகள் காட்டிய அன்பு சற்று ஆறுதலையும் அவரை நாடு திரும்பாமல் இங்கேயே இருக்கவும் செய்தது.

இழப்பீடு தொகை

வேலையிட விபத்து இழப்பீடு தொகையான அவருக்கு சுமார் S$137,000 சிங்கப்பூர் டாலர் கிடைத்தது, அதை வைத்து முதலில் தன் S$16,000 கடனை அடைத்தார். பெற்றோர் விவசாயம் செய்ய சொந்த நிலம் வாங்கி கொடுத்தார்.

மீதமுள்ள அந்த பணத்தை அவர் என்ன செய்தார் என்பது தான் இந்த கதையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கிராமத்தில் பள்ளி

ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்த ரஹ்மான், படிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், அவரின் குடும்ப சூழல் காரணமாக அவரால் பள்ளிப் படிப்பை தொடரமுடியவில்லை.

வேலைக்கு சென்றாக வேண்டும் என்ற கட்டாயம் அவரின் படிப்புக்கு முட்டுக்கட்டையாய் வந்து நின்றது.

தனக்கு கிடைக்காத கல்வி தன்னுடைய கிராம குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தார் ரஹ்மான், அதுவே அவரது லட்சியமாக மாறியது.

பள்ளி மாணாக்கர்களுடன் ரஹ்மான் முகமது அதவுர்

2020-ல் தன் சொந்த கிராமத்தில் Al-Shohaq என்ற பள்ளி ஒன்றை அவர் தொடங்கினார்.

முதலாம் ஆண்டே பாலர் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை தொடங்கப்பட்ட இந்த பள்ளியில், 211 மாணவர்கள் சேர்ந்ததாகவும் மேலும் 13 ஊழியர்கள் அங்கு பணிபுரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் எதிர்கொண்ட சவால்களை கல்வியாக கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அதன்படி, அங்கு ஆங்கிலம் மற்றும் கணினிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது.

கிராம புறங்களில் இது வழக்கமான பாடங்கள் இல்லை என்றாலும் அதன் அவசியம் புரிந்து அவற்றை கட்டாயமாக்கினார் ரஹ்மான்.

சிங்கப்பூர் பள்ளிகளின் பாட முறை

சிங்கப்பூர் பள்ளிகளின் பாட முறை, கட்டமைப்பு மற்றும் பள்ளி நிர்வாக மேலாண்மை ஆகியவற்றை கற்றுக்கொண்ட அவர், அதை சொந்த பள்ளியில் நடைமுறைப் படுத்தினார்.

மாணவர்களுக்காக விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக்கள் போன்ற செயல்பாடுகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக பள்ளியின் மீது பெற்றோர்களும் அதிக ஆர்வம் காட்ட தொடங்கினர்.

கணினி பயிற்சி

2020 முதல் 2025 வரை, 115 பேர் மேல்நிலை கல்விக்காக வேண்டி தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் Al-Shohaq பள்ளியில் கிடைத்த தரமான கல்வி தான் என சொல்லப்படுகிறது.

மிக பெரிய கனவு

அவருக்கு 3 மாடி பள்ளிக்கூடம் காட்டுவதே மிக பெரிய கனவு.

சாதாரண தகரக்கூரை கொண்டு அந்த பள்ளி அமைக்கப்பட்டதால் வெயில் கடுமையாக சுட்டெரிக்கும் காலத்தில் வகுப்பறைகள் சூடாக மாறியது. கிராம புறம் என்பதால் மின்சாரம் அடிக்கடி பல மணி நேரம் துண்டிக்கப்படும், இதனால் கணினி வகுப்புகள் நடத்துவதிலும் சிரமம் ஏற்பட்டது.

3 மாடி பள்ளிக்கூடம்

இதை சரிசெய்ய விரும்பிய ரஹ்மானும் அவரது சிங்கப்பூர் தோழர்களும் புதிதாக நிரந்தர கட்டிடம் ஒன்றை அமைக்க விரும்பினர்.

அதன் வெளிப்பாடாக, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 மாடி பள்ளிக்கூடம் கட்டும் பணிகள் தொடங்கின. 2026 ஜூன் நிலவரப்படி அங்கு 95 சதவீத வேலைகள் முடிந்ததாக கூறப்படுகிறது.

95 சதவீத வேலைகள் முடிந்த 3-மாடி பள்ளி

அதன் மொத்த கட்டுமானச் செலவு மட்டுமே கிட்டத்தட்ட S$21,500 என்று Salt&Light தெரிவித்துள்ளது.

அடுத்த இலக்கு “பயிற்சி நிலையம்”

பள்ளியுடன் கனவை முடித்துக்கொள்ளாமல் பங்களாதேஷ் ஊழியர்களுக்கு உதவுவதே அடுத்த பெரிய இலக்காக அவர் கொண்டுள்ளார்.

பங்களாதேஷில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிலையம் அமைப்பதே நோக்கமாக அவர் கொண்டுள்ளார்.

அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பள்ளிக்கு பயன்படுத்தவும், அதனால் டொனேஷன் நம்பி இருக்கும் நிலையில் இருந்து வெளியே வருவதையும் அவர் நோக்கமாக கொண்டுள்ளார்.

இரண்டாவது வாழ்க்கை

“வெடிப்பை நான் விபத்தாக பார்க்கவில்லை.. அதிகம் கற்றுக்கொள்ளவும் நல்லதை செய்யவும் ஓர் அழைப்பாக பார்க்கிறேன்” என்றார்.

தற்போது 32 வயதாகும் ரஹ்மானுக்கு மனைவியும், 4 வயது மகனும், ஓர் மகளும் உள்ளனர்.

தன் குடும்பத்துடன் ரஹ்மான்

சாதாரண வெளிநாட்டு ஊழியராக வந்த ரஹ்மானின் தோற்றம் வெடிப்பால் மாறியது.. மாறியது தோற்றம் மட்டும் அல்ல அவரின் நோக்கமும் தான்…

இதுபோன்ற சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் சுவாரசிய வாழக்கை நிகழ்வுகளை தெரிந்துகொள்ள சிங்கப்பூர் செய்திகள் உடன் இணைப்பில் இருங்கள்..

All Photos: Rahman Mohammad Ataur

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.