ஒர்க் பெர்மிட் ஊழியர்களை குறிவைக்கும் e-wallets மோசடி: 21 வயது நபர் கைது – சிக்கிய ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை

Published: 27 Aug 2026, 1:36 PM |

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit) வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களிடம் e-wallets கணக்குகளை பெற்று அவற்றை மோசடிக்கு பயன்படுத்தியதாக 21 வயதுமிக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவர் மீது மோசடி தொடர்பில் இன்று (ஆக.27) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த மே மாதம் முதல், ஒர்க் பெர்மிட் வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் Singpass கணக்குகளை பயன்படுத்தி அந்த நபர் e-wallets கணக்குகளை திறந்ததாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதற்காக வேண்டி ஒவ்வொரு ஊழியருக்கும் தலா S$50 கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த e-wallets கணக்குகளை பயன்படுத்தி குறைந்தது S$9,792 பணம் சட்டத்திற்கு புறம்பான முறையில் பரிமாறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (ஆக.25) மற்றும் நேற்று (ஆக.26) காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் அந்த 21 வயதுமிக்க நபர் பிடிபட்டார்.

குற்றம் நிரூபணமானால், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்காப்படலாம்.

ஒர்க் பெர்மிட் ஊழியர்களிடம் விசாரணை

இந்த சம்பவத்தில் பணத்துக்காக e-wallets கணக்குகளை விற்பனை செய்த ஒர்க் பெர்மிட் வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படலாம்.

யாரேனும் உடனடியாக பணம் தருகிறேன் உங்கள் வங்கி அல்லது singapass கணக்கு விவரங்களை தாருங்கள் என கேட்டால் கொடுத்து விடாதீர்கள்.

இதுபோன்ற மோசடி உடந்தை குற்றத்திற்கு அபராதம் மற்றும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை அதாவது Singpass கடவுச்சொல், OTP தகவல், வங்கி கணக்கு தகவல் அல்லது e-wallet கணக்குகளை பணத்திற்காக யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

ஏனெனில், இப்படி பணத்துக்கு பெறப்படும் கணக்குகள் மோசடிக்கு பயன்படுத்தப்படலாம்.

அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் தகவல்களை கொடுத்தவர்களும் சட்டப்படி குற்றவாளி என நடவடிக்கை எடுக்கப்படலாம்.

சிங்கப்பூரில் இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் மோசடியில் S$410.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.