சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit) வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் Singpass கணக்குகளை ஏமாற்றி பெற்றதாக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து, ஒர்க் பெர்மிட் வைத்திருக்கும் குறைந்தது 23 வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது Singpass கணக்குகள் முடக்கப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த ஊழியர்களை அணுகிய சிலர், Singpass கணக்கிற்கான அணுகலை (access) எங்களிடம் வழங்கினால் S$80 சிங்கப்பூர் டாலர் ரொக்கம் தருவதாகவும் ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
மேலும், சில ஊழியர்களின் Singpass கணக்குகளைப் பயன்படுத்தி தேசிய தின அணிவகுப்புகான (NDP) நுழைவு டிக்கெட்டுகளை S$500 என்ற தள்ளுபடி விலையில் தாங்கள் வாங்கப் பயன்படுத்தப் போவதாகவும் கூறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஒர்க் பெர்மிட் அட்டைகளை பெற்று அவற்றை ஸ்கேன் செய்து, அவர்களிடமிருந்து Singpass கடவுச்சொற்களையும் பெற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏமாற்றி பெறப்பட்ட அந்த Singpass கணக்குகள், தொலைத்தொடர்பு (telco) அல்லது நிதிச் சார்ந்த சேவை கணக்குகளைத் தொடங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 29 மற்றும் 38 வயதுமிக்க பெண்கள் இருவரும் மேலும் 25 வயதுமிக்க ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
136 வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பு
அதைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், இந்த மோசடியுடன் தொடர்புடைய மேலும் 136 வெளிநாட்டு ஊழியர்களின் Singpass கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 3 பேரின் மீதும் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.