இந்திய கட்டுமான ஊழியர் மீது ஏறிய பேருந்து: ஓட்டுநருக்கு சிறை – 5 ஆண்டு தடை

Published: 4 Sep 2026, 9:16 PM |
Indian Construction Worker accident SMRT Bus

தஞ்சோங் பகார் பகுதியில் இந்திய கட்டுமான ஊழியர் மீது கவனிக்காமல் பேருந்தை ஏற்றிய 50 வயதுமிக்க ஓட்டுநருக்கு 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, அதன் பின்னர் 5 ஆண்டுகள் அவர் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.

தமிழ் கட்டுமான ஊழியர் பாதிப்பு

இந்த சம்பவத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த 35 வயதுமிக்க கட்டுமான ஊழியருக்கு வலது கணுக்காலில் முறிவு ஏற்பட்டதாகவும், மேலும் இடது முழங்காலில் கிழிவு காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

முகம்மத் அதி அப்துல்லாஹ் என்ற அந்த பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி கடும் காயம் ஏற்படுத்திய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், வரும் செப்.7 முதல் சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க தொடங்குவார் என கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

இந்த விபத்து 2024-ல் ஜூன் 27ஆம் தேதி அன்று ஆன்சன் சாலையில் நடந்தது.

தஞ்சோங் பகார் பகுதியில் பாமர் சாலை வழியாக ஆன்சன் சாலை நோக்கி சென்ற அதி, போக்குவரத்து சிங்னல் பச்சையாக இருந்ததால் பேருந்தை வலதுபுறம் திரும்பினார்.

அப்போது கட்டுமான நிறுவனம் ஒன்றின் போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்த 35 வயதான கட்டுமான ஊழியர் நான்காவது பாதையில் முதுகை காட்டி பின்புறமாக நின்றுகொண்டிருந்தார்.

அவரை கவனிக்காமல் வலதுபுறம் திருப்பிய ஓட்டுநர், ஊழியர் மீது பேருந்தை விட்டு ஏற்றினார். இதில் முன்பக்க சக்கரம் அவரின் காலில் ஏறியது. இருப்பினும், பின்பக்க சக்கரத்தில் சிக்காமல் ஊழியர் நூலிழையில் உயிர் தப்பினார்.

86 நாள்கள் மருத்துவ விடுப்பு

அதன் பின்னர் ஊழியர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜூன் 29 அன்று அவருக்கு கணுக்கால் முறிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஜூலை 12 அன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவருக்கு மொத்தம் 86 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

பாதுகாப்புடன் இருந்த ஊழியர்

ஊழியர் பாதுகாப்பான reflective ஆடை அணிந்திருந்ததுடன், தற்காலிகமாக பாதை மூடப்பட்டிருப்பதை குறிக்கும் ட்ராபிக் கோன் ஒன்றையும் வைத்திருந்தார்.

அங்கு ஊழியர் தெளிவாக தெரியும்படி நின்றுகொண்டிருந்தார், ஆனால் பேருந்தின் வேகம் விபத்துக்கு முன்பும் பின்பும் குறையவில்லை என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அருகிலுள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

Photo SS from SGRV

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.