“இது ஜோக் அல்ல”- வெளிநாட்டு ஊழியர் பற்றி இனவாத கருத்து.. வெகுண்டெழுந்த பெண்

Published: 9 Sep 2026, 12:34 PM |
Woman confronts supermarket cashier over ‘racist’ comment towards migrant worker

சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வெளிநாட்டு ஊழியரை பற்றி இனவாத அடிப்படையில் கருத்து தெரிவித்த காசாளரை பெண் ஒருவர் எதிர்கொண்ட சம்பவம் வலைத்தளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நேற்று முன்தினம் (ஆக.7) வெளியான அந்த பதிவை Ms N என்ற பெண் பகிர்ந்துள்ளார்.

நிறம் குறித்து கருத்து

அந்த பதிவின்படி, Ms N சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்தபோது, யாரோ ஒருவர் “அந்த அண்ணா ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறார்?” என்று மாண்டரின் மொழியில் மீண்டும் மீண்டும் சொல்வதை செவிதாழ்த்தி கேட்டுள்ளார்.

யார் அவ்வாறு கூறுவது என அருகில் சென்று பார்த்தபோது, காசாளர் ஒருவர் இழுவண்டியில் (stroller) அமர்ந்திருந்த குழந்தையிடம் அதை கூறியதாக Ms N குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையின் அருகில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் நின்றதாகவும், பின்னர் தான் வாங்கிய பொருளுக்கு பணத்தை செலுத்திவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

அதிர்ச்சியும் கோபமும்

வெளிநாட்டு ஊழியரை நோக்கி சொல்லப்பட்ட இந்த கருத்தை கேட்ட Ms N, அதிர்ச்சியும் கோபமும் அடைந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் காசாளர் அருகில் சென்ற பெண், இதுகுறித்து விளக்கி கூறினார். அதாவது இது தவறானது என்றும் இது இனவாத கருத்தாக கருதப்படலாம் என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினார்.

அதற்கு, தாம் குழந்தையுடன் விளையாடியதாக காசாளர் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த Ms N, குழந்தைகள் சுற்றியுள்ள பெரியவர்களாகிய நம் செயல்கள் மற்றும் வார்த்தைகளையே கற்றுக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

இது “ஜோக்” அல்ல

ஒருவரின் தோற்றம் வேறுபட்டு இருப்பதை குழந்தையிடம் வேறுபடுத்தி கூறுவது முறையல்ல என்பதையும் Ms N சுட்டிக்காட்டினார்.

மேலும் தனது பதிவில், சிங்கப்பூர் பல துறைகளில் முன்னேறிய சமூகமாக இருந்தாலும் பிறரை மதிப்பதில் கூடுதல் முன்னேற்றம் தேவை என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

அதேபோல, இனவாத கருத்துக்களை “ஜோக்” என்று கூறி அதனை நியாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் சொன்னார்.

இணையவாசிகள் ஆதரவு

இந்த பதிவை தொடர்ந்து பல இணையவாசிகள் Ms N க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர்.

அவர் காசாளரை எதிர்கொண்ட விதம் சரியானது என பலர் பாராட்டினர்.

சிங்கப்பூர் போன்ற பல சமூகம் வாழும் ஒற்றுமையான நாட்டில் பிறரின் உருவம், தோற்றம் அல்லது பின்னணியை மையமாக கொண்டு கேலிகிண்டல் செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என சிலர் கருத்து கூறினர்.

இந்தச் சம்பவத்தை “அருவருப்பான செயல்” என்று விவரித்து அந்தப் பதிவை முடித்தார் Ms N.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சிங்கை தமிழ் WhatsApp குழுவில் இணைந்துகொள்ளுங்கள்!

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.