சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக உரிமம் இல்லா கடன் வழங்கும் நடவடிக்கையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 98 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை கூறியுள்ளது.
17 முதல் 78 வயதுக்கு இடைப்பட்ட அவர்கள், தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் சிக்கினர்.
கடந்த ஆக.25 முதல் 31 வரை காவல்துறை மற்றும் இதர துணை பிரிவு அதிகாரிகள் அந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
என்னென்ன குற்றங்களுக்காக விசாரணை?
- உரிமம் இல்லா கடன் வழங்கிய சந்தேகத்தில் ஒருவர் சிக்கினார்.
- கடன் வாங்கியவர்கள் வீடுகளில் மிரட்டல் மற்றும் தொல்லை கொடுத்த சந்தேகத்தில் 7 பேர் சிக்கினர்.
- 46 பேர் இடையில் செயல்பட்டவர்களாக சந்தேகம்.
- ATM கார்டுகள், PIN எண்கள் போன்றவற்றை சட்டவிரோத கடன் வழங்குபவர்களுக்கு வழங்கிய சந்தேகத்தில் 41 பேர் சிக்கினர்.
வங்கி கணக்கு, ATM அட்டை கொடுத்தவர்களும் குற்றவாளி?
இதுபோன்ற சட்டவிரோத கடன் நடவடிக்கைகளில் யாருடைய ATM அட்டை, கைபேசி எண், வங்கி கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பயன்படுத்தப்பட்டால் அவரும் குற்றத்திற்கு உதவியதாகக் கருதப்படலாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கும் எச்சரிக்கை
சட்டவிரோத கடன் நடவடிக்கைகளுக்கு உதவும் அல்லது கடன் வாங்கும் வெளிநாட்டவர்களின் மாணவர் அனுமதி (Student Pass) அல்லது வேலை அனுமதிகள் (Work Pass) ரத்து செய்யப்படலாம், அதோடு சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்படலாம்.
தனிப்பட்ட வங்கி தொடர்புடைய ஆவணங்களை மற்றவர்களிடம் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.