சிங்கப்பூரில் “ரிட்டன் ரைட் லோகோ” (Return Right logo) அல்லது “BCRS டெபாசிட் முத்திரை” (BCRS Deposit Mark) இல்லாத குறிப்பிட்ட வகை கேன் மற்றும் பாட்டில் பானங்களை விற்பனை செய்வது அக்டோபர் 1, 2026 முதல் குற்றமாகும்.
புதிய விதி அமலுக்கு வருவதற்கு முன்னர், பழைய இருப்புகளை விற்று தீர்க்கும் நோக்கில் சில கடைகள் பானங்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கின்றன.
சில கடைகள் ஒருபடி இறங்கி, சில பானங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்குகின்றன.
10 சென்ட் டெபாசிட்
150ml முதல் 3 லிட்டர் வரையிலான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்களை ’10 சென்ட் டெபாசிட் ‘ குறியீடு இல்லாமல் சிங்கப்பூரில் விற்பனை செய்ய முடியாது.
தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) நிர்வகிக்கும் இந்த திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பானங்களுக்கும் கூடுதலாக 10 சென்ட் டெபாசிட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
எப்படி திரும்ப பெறுவது?
அந்த கட்டணங்களை திரும்ப பெற, பயன்படுத்தப்பட்ட காலியான பாட்டில் அல்லது கேனை திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரத்தில் (Reverse vending machine) செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த ஏப்ரல் 1 முதல், சுமார் 1,000 க்கும் மேற்பட்ட தானியங்கி இயந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
அவகாசம்
உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தங்களிடம் இருக்கும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்க்க கொடுக்கப்பட்ட ஆறு மாத கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 1 முதல், சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் அனைத்து தகுதியான பானங்களுக்கும் BCRS டெபாசிட் குறியீடு (deposit mark) மற்றும் பார்கோடு ஆகியவை இல்லையென்றால், அது குற்றமாகக் கருதப்படும்.
விதியை மீறினால்?
அக்டோபர் 1 முதல், மேற்கண்ட விதியை மீறி பிடிபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$10,000 வரை அபராதம் மற்றும்/அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் தொடர்புடைய முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ள சிங்கப்பூர் செய்திகள் உடன் இணைந்திருங்கள்..