சிங்கப்பூரில் ஓய்வு பெற்ற 78 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், சுமார் 8 ஆண்டுகளாக ஆங் மோ கியோ கார் பார்க்கிங் பகுதியை எந்தவித சம்பளமும் இல்லாமல் சுத்தம் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஆங் மோ கியோ பகுதியில் வசித்து வரும் சென் ஜின்ஹே என்ற அவர் சுமார் 35 ஆண்டுகள் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றியுள்ளார், கடந்த 2015 இல் ஓய்வு பெற்ற அவரால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.
இதனால், ஆரம்பத்தில் HDB அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மூத்த குடிமக்கள் சங்கத்தை சுத்தம் செய்து வந்த அவர், பின்னர் அதன் அருகிலே உள்ள கார் பார்க்கிங் இடத்தில் விழும் இலைகளை சுத்தம் செய்யத் தொடங்கினார்.
அதோடு நிறுத்ததாக சென், தினமும் அப்பகுதியை சுத்தம் செய்ய தொடங்கினார், அதாவது 2 மணிநேரங்களுக்கு மேலாக அவர் துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் கருவியுடன் அப்பகுதியை சுற்றி வருவாராம்.
இதற்காக அவர் எந்த சம்பளமும் பெறுவது கிடையாது, எந்த முதலாளியும் அவரை சுத்தம் செய் என்று சொல்வதில்லை. அவர் மனநிறைவோடு தனக்கு ஏற்ற நேரத்தில் சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
“தரையில் இலைகள் நிறைந்து கிடப்பது எனக்கு பிடிக்காது, எனவே கையில் துடைப்பத்தை எடுத்து நானே சுத்தம் செய்யத் தொடங்கினேன்” என்று அவர் கூறினார்.
மேலும், “இதை நான் செய்யாவிட்டால் வேற யாரும் அதை பற்றி கவலைப்படப் போவது இல்லை” என்றார்.
இந்த பகுதி சுத்தமாக இருப்பதை பார்க்கும்போது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைப்பதாக சொன்னார்.
தன்னால் நடக்க முடியாத நிலை வரும் வரை தொடர்ந்து இதை செய்வேன் என அவர் உறுதி கூறியுள்ளார்.
சமூக பங்களிப்புக்காக வேண்டி 2021ஆம் ஆண்டு அவர் விருது பெற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
எந்தவித சம்பளமும் இல்லாமல் பொதுநலத்தோடு அவர் மேற்கொள்ளும் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுபோன்ற சிங்கப்பூர் ஊழியர்களின் சுவாரசிய வாழக்கை நிகழ்வுகளை தெரிந்துகொள்ள சிங்கப்பூர் செய்திகள் உடன் இணைப்பில் இருங்கள்..