சிங்கப்பூரின் சுவா சூ காங் பகுதியில் தவறுதலாக குப்பை தொட்டியில் போடப்பட்ட பெண் ஒருவரின் கைபேசியை பத்திரமாக மீட்டுக்கொடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சமையலறை பொருட்களை சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த பெண், டேபிள் கவர் ஒன்றுடன் சேர்த்து தன்னுடைய கைப்பேசியையும் கவனிக்காமல் குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.
பின்னர் தன்னுடைய கைபேசியை காணவில்லை என்பதை உறுதி பெண், அவரின் மகளான ஷாலினிக்கு தகவல் கொடுத்துள்ளார். கைபேசியில் முக்கியமான தொடர்பு எண்களும், குடும்பப் புகைப்படங்களும் இருந்ததாக அவர் மிகவும் கவலைக்குள்ளானார்.
உதவி கோரல்
இதனை அடுத்து, அந்த பெண் மகள் ஷாலினியை உடன் அழைத்துக்கொண்டு பிளாக் கீழே சென்று பார்த்தபோது அங்கு ஊழியர்கள் யாரும் இல்லை. அங்குள்ள அறிவிப்பு பலகையில் இருந்த டவுன் கவுன்சில் தொடர்பு எண்ணைக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டனர்.
அவர்களிடம் பேசிய டவுன் கவுன்சில் அதிகாரி, 10 நிமிடத்தில் அங்கு ஊழியர் ஒருவர் வருவார் என்றும், பின்னர் குப்பை தொட்டியை அவர் திறந்து தருவார் என்றும், நீங்களே கைபேசியை தேட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதிகாரியின் பேச்சுக்கு இணங்க தாயும் மகளும் கையுறையுடன் அங்கு தயாராக இருந்தனர்.
பின்னர் அங்கு வந்த ஊழியர் குப்பை தொட்டியை திறந்து அதிலிருந்த அவர்களின் டேபிள் கவரை அவர் கையாலேயே வெளியே எடுத்து அதனுள் இருந்த கைபேசியை அவர்களிடம் ஒப்படைத்தார்.
நன்றி
ஊழியரின் இந்த பேருதவிக்கு தாயும் மகளும் நன்றி தெரிவித்தனர். “அவரின் வேலை என்பது சுலபமானது அல்ல, இருப்பினும் எந்த புகாரும் சொல்லாமல் அவர் புன்னகையுடன் உதவி செய்தார்” என்று ஷாலினி கூறினார்.
அவருடன் ஒரு செல்ஃபீ எடுத்துக்கொண்ட தாய், அவருக்கு நன்றியின் அடையாளமாக சிறிய பணப்பரிசு ஒன்றையும் வழங்கினார்.
“இவரை போன்ற ஊழியர்கள் பெரிதாக பாராட்டப்படுவதில்லை.., ஆனாலும், சமூகத்துக்கு அவர்கள் ஆற்றும் பணி ஆக பெரியது” என்பதையும் ஷாலினி நெகிழ்ச்சியுடன் கூறினார்.