சிங்கப்பூரில் சம்பள பாக்கியுடன் தவித்து வந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய வேலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களில் சிலருக்கு சம்பள பாக்கியும் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சம்பள பாக்கியால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உணவு ஏற்பாடு, தங்கும் இடம் மற்றும் நிதி தொடர்பான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு ஊழியர்களின் நிலை
சம்பளம் கிடைக்காமலும் கையில் காசும் இல்லாமலும் தன் குடுபத்துக்கு என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் தவித்து வந்தனர்.
அதில், 21 வயதுமிக்க ரப்பானி முகம்மத் கோலாம் என்பவரும் ஒருவர். 2 மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்து வந்த அவர் வெறும் 10 வெள்ளி மட்டுமே கையில் இருந்ததாக கூறியுள்ளார்.
தன் குடும்பத்தை நினைத்து வருத்திக்கொண்டு இருந்த அவருக்கு நேற்று (நவ.6) கட்டுமான நிறுவனம் ஒன்றில் புதிய வேலை கிடைத்தது. இதனால் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
அதே போல, முகம்மத் சபீர் (23) என்ற இன்னொரு வெளிநாட்டு ஊழியரும் தனக்கு வர வேண்டிய நிலுவை சம்பளத்தை தற்போது பெற்றார், இப்போது தாம் நிம்மதியாக இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தளத்திடம் பகிர்ந்துகொண்டார்.
குடும்பத்தை காப்பாற்ற பணம் இன்றியமையாத ஒன்று என்பதை சுட்டிக்காட்டிய அவர், பெற்ற பணத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார். இவருக்கும் கட்டுமான நிறுவனத்தில் வேலை பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோல சைமன் இஸ்லாம் என்ற ஊழியர், 3 மாதங்கள் சம்பளம் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். தாம் சிங்கப்பூருக்கு வேலைக்கு வர சுமார் 6,000 வெள்ளி கடன் வாங்கியதாக கூறியுள்ளார்.
சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்பதால் இன்னொரு வேலை தனக்கு கண்டிப்பாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மனிதவள அமைச்சகம் விசாரணை
பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் Process Maintenance Solutions Pte Ltd மற்றும் Jurong Technical & Construction Pte Ltd ஆகிய நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் என்று NTUC கூறியது.
அந்நிறுவனங்களிடம் மனிதவள அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இன்னும் வெளிநாட்டு ஊழியர்கள் பலருக்கு சம்பளம் பாக்கி நிலுவையில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 19, 20 தேதிகளில் சுமார் 230 வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையத்தில் ஒன்றுகூடி வெளிநாட்டு ஊழியர் நிலையத்திடம் (MWC) உதவி கேட்டனர்.
Photo:MWC/Fb
இதுபோன்ற வெளிநாட்டு ஊழியர்களின் செய்திகளை துல்லியமாக தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…