பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் நபர் நேற்று (ஆக.17) சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தபோது கைது செய்யப்பட்டார்.
சம்பத் என்ற 39 வயது மதிக்கத்தக்க அந்த நபர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. அவர் மீது பண மோசடி மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன.
அவர் மீது பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் அவரை கைது செய்ய முயலும்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பத்துக்கு “லுக் அவுட்” நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவர் தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், நேற்று சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை வந்த சம்பத் விமான நிலைய அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
அதனை தொடர்ந்து அவர் சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவர் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் விசாரணைகள் தொடர்கின்றன.