சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு 8 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 94 வயதான தன்னுடைய முதலாளியை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வயதான அந்த முதலாளி தனக்கு உணவு தாயார் செய்யச் சொல்லி பணிப்பெண்ணின் அறைக்கதவை மீண்டும் மீண்டும் தட்டிக்கொண்டே இருந்ததால் கோபமடைந்த பணிப்பெண் வெளியே வந்து முதலாளியின் நடை குச்சியை பிடித்து இழுத்துள்ளார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட இழுபறி தகராறில் முதிவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) குற்றத்தை ஒப்புக்கொண்ட Sulastri Wulandari என்ற அந்த பணிப்பெண்ணுக்கு, 8 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காவல்துறையில் புகார்
இந்த சம்பவத்தில் முதியவருக்கு தலையில் 2 செ.மீ. அளவில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், மூளையின் இடப்பகுதியில் Subdural Haemorrhage என்னும் மண்டையோடு மற்றும் மூளையைச் சுற்றிய பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
முதியவரை கீழே தள்ளி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவரது மகள் கடந்த மார்ச் 13 அன்று காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். இதை அடுத்து, பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
மன்னிப்பு கோரிய பணிப்பெண்
தாம் செய்தது தவறு என்பதை உணர்ந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
பணிப்பெண்ணுக்காக தனியாக வழக்கறிஞர் யாரும் நீதிமன்றத்தில் வாதிடவில்லை. தவறை உணர்ந்த அவர், தனக்கு கருணை காட்டி குறைந்த தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
அவருக்கு எதிராக வாதிட்ட அரசாங்க வழக்கறிஞர் 9 வார சிறைத் தண்டனை வழங்கவேண்டும் என வாதிட்டார்.
வயதான முதியவரை பார்த்துக்கொள்ள வேண்டி பணியமர்த்தப்பட்ட பணிப்பெண், தனது கடமையை மீறி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.