சிங்கப்பூரில் இந்திய இனத்தை சேர்ந்த 74 வயது சிங்கப்பூர் பெண் ஒருவரின் இறுதிச்சடங்கு சீன பாரம்பரிய முறைப்படி நடந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“யா நி” என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள அந்த பெண்மணி, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நிமோனியா காரணமாக உயிரிழந்தார்.
தனது வாழ்நாள் முழுவதும் சீன கலாச்சாரத்துடன் மிக நெருக்கமாக வாழ்ந்து வந்த யா நி, மரணிப்பதற்கு முன்பாக தனது இறுதிச்சடங்கையும் சீன தாவோயிஸ்ட் முறைப்படி நடத்த வேண்டும் என்று தன் குடும்பத்தாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடைசி விருப்பப்படி அவரது இறுதிச்சடங்கு சீன பாரம்பரிய முறையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் குடும்பத்தின் இளைய தலைமுறையினர் நீலம் மற்றும் பச்சை நிற கீழ் ஆடைகளை அணிந்திருந்தனர்.
மேலும், சீன பாரம்பரிய வழக்கப்படி அமைக்கப்பட்ட மேடை முன்பு முட்டிக்காலிட்டு மரியாதையும் செலுத்தினர்.
சீனர்கள் அதிகம் வாழும் சைனீஸ் வில்லேஜில் வளர்ந்தவர்
யா நி, சிங்கப்பூரில் சீனர்கள் அதிகம் வசிக்கும் சைனீஸ் வில்லேஜில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தில் உள்ள மூன்று தலைமுறையினர் சரளமாக மாண்டரின் மற்றும் ஹொக்கியென் மொழிகளைப் பேசக்கூடியவர்கள்.
யா நியின் தந்தை இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து வந்தவர், மேலும் அவரது தாயார் மலாயாவைச் சேர்ந்தவர்.
அதன் பின்னர் இவர்களது குடும்பம் செம்பவாங் பகுதியில் குடியேறி வசித்து வந்தனர்.
தீபாவளி மற்றும் சீனப் புத்தாண்டையும் கொண்டாடிய குடும்பம்
அந்த காலத்தில் அப்பகுதியில் வசித்த ஒரே இந்திய குடும்பம் இவர்கள் தான்.
இதன் காரணமாக சக மக்களுடன் பேசி தொடர்புகொள்ள அவர்கள் ஹொக்கியென் மொழியை பேசி கற்றுக்கொண்டனர்.
தீபாவளியையும் சீனப் புத்தாண்டையும் அவர்கள் கொண்டாடி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யா நியின் தந்தை கேரள மொழியான மலையாளம் பேசக்கூடியவர், அவரது மனைவி இயல்பாக ஹொக்கியென் மொழி பேசக்கூடியவர்.
சீன மற்றும் இந்திய கலாசார முறைப்படி இறுதிச்சடங்கு
யா நியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் சீன பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட அதே நேரத்தில், இந்திய கலாச்சார முறையும் பின்பற்றப்பட்டது.
அதாவது, யா நியின் புகைப்படத்துக்கு பொட்டு வைத்து அவரது மகன் இந்திய கலாச்சாரத்தையும் நினைவு கூர்ந்தார்.
இந்த சம்பவம் சிங்கப்பூரின் பன்முகத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைவதாக இணையவாசிகள் கருத்து கூறி வருகின்றனர்.