சிங்கப்பூர் BKE விரைவுச்சாலையில் இன்று (ஆக.19) காலை பேருந்து, லாரி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டாய் ரோடு வெளியேறும் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது, இதில் இரு கார்கள், மோட்டார் சைக்கிள், லாரி மற்றும் பேருந்து ஆகியவை சிக்கியதாக Straits Times கூறியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 58 வயதுமிக்க கார் ஓட்டுநர், 54 வயதுமிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டி மற்றும் 57 வயது பேருந்து ஓட்டுநர் ஆகியோர் சுயநினைவுடன் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை (SCDF) கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுநர் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வாகன ஓட்டிகளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேலும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் SBS Transit நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Straits Times செய்தியிடம் கூறினார்.
Photos: SG ROAD BLOCKS TRAFFIC NEWS/TELEGRAM