சிங்கப்பூர் பொதுப் பேருந்துகளில் குப்பை போடுவது, கால்களை ஹாயாக இருக்கையில் வைத்தவண்ணம் பயணிப்பது உள்ளிட்ட செயல்களில் இனி ஈடுபட்டால் அதிகபட்சமாக $500 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த புதிய விதிமுறைகள் செப்.23, 2026 முதல் நடப்புக்கு வருகின்றன.
பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பாதுகாப்பான போக்குவரத்து நடைமுறையை உறுதி செய்யவும் இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகள் மற்றும் அபராதங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
சரி, எந்தந்த செயல்களுக்கு இனி அபாரதம் விதிக்கப்படும் என்பதை விரிவாக பார்ப்போம்.
பொதுப் பேருந்துகளில் நாம் சாதாரணமாக செய்யும் செயல்கள் கூட இனி புதிய விதிமுறைகளின்கீழ் குற்றமாக கருதப்படலாம்.
S$500 அபராதம் விதிக்கப்படும் புதிய விதிமுறைகள்
- பேருந்தில் உணவு உண்பது
- பானங்களை பருகுவது
- பேருந்து இருக்கையில் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு பயணிப்பது
- பேருந்து உள்ளே குப்பை கூளங்களை போடுவது
- அதிக ஒலியுடன் சத்தமாக இசை அல்லது ஆடியோக்களை இயக்குவது
மேற்கண்ட இந்த செயல்களை சாதரணமாக நினைக்க வேண்டாம். இதற்கு அதிகபட்சமாக $500 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் என LTA கூறியுள்ளது.
S$5,000 வரை அபராதம் விதிக்கப்படும் செயல்கள்
பேருந்து நிலையங்கள் (bus interchanges) மற்றும் பேருந்து முனையங்களில் (terminals) மற்ற பயணிகளுக்கு இடையூறு, ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு $5,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதேபோல, பொதுப் பேருந்து, பேருந்து நிலையம் மற்றும் முனையம் உள்ளிட்ட அதன் எந்த பகுதிகளையும் அசுத்தம் செய்தால் அதிகபட்சமாக $5,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
யார் யார் நடவடிக்கை எடுக்க முடியும்..?
டிக்கெட் பரிசோதகர் மற்றும் பேருந்து பரிமாற்ற நிலைய ஊழியர்கள் உட்பட பொதுப் பேருந்து நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள், மேற்கண்ட விதிமீறலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு எதிராக ‘விதிமீறலுக்கான நிர்வாக அறிவிப்புகளை’ (Administrative NOO) வழங்க முடியும்.
Administrative NOO வழங்கப்பட்ட பிறகு, விதிமீறல் குறித்து LTA விசாரணை மேற்கொள்ளும்.
குறிப்பு: பேருந்து ஓட்டுனர்களுக்கு Administrative NOO வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அவர்கள் பேருந்தை மட்டும் இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
பேருந்து ஓட்டுநருக்கான அதிகாரம்?
பேருந்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வோரை அந்த செயலை நிறுத்துமாறு ஓட்டுநர் வலியுறுத்தலாம்.
அதற்கு இணங்க மறுக்கும் பயணிகளை பேருந்தை விட்டு கீழே இறங்க சொல்லவும் ஓட்டுநருக்கு அதிகாரம் உள்ளது.
இறங்க மறுத்து இடையூர் செய்யும் பயணிகளுக்கு எதிராக காவல்துறையை அழைக்க கூட அவருக்கு உரிமை உண்டு.
இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும்
இந்த புதிய விதிமுறை நாளை மறுநாள் செப்.23 அன்று நடப்புக்கு வரவுள்ள நிலையில் சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் பேருந்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் கவனமுடன் இருந்தாலும் புதிதாக வந்தவர்கள் சற்று கவன குறைவாக இருக்க வாய்ப்பு அதிகள் இருக்கிறது.
எனவே, புதிதாக சிங்கப்பூர் வந்தவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள்.
இது போன்ற முக்கிய சிங்கப்பூர் செய்திகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைப்பில் இருங்கள்…