சிங்கப்பூரில் காவல்துறை கன்டோன்மென்ட் வளாகத்தின் (Police Cantonment Complex) கண்ணாடி நுழைவு வாயில் கதவில் கல்லை கொண்டு அடித்து சேதப்படுத்திய 44 வயது நபர் பிடிபட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (செப்.15) இரவு சுமார் 10:55 மணியளவில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
பொதுச்சொத்து சேதம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்றும், பின்னர் விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் 44 வயது நபரை கைது செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பிடிபட்ட ஆடவர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகின்றன.
கண்ணாடி கதவு உடைக்க பயன்படுத்தப்பட்ட கல் சாட்சி ஆதாரமாக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த கல்லை பயன்படுத்தி அவர் இருமுறை கண்ணாடி கதவை அடித்து உடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக இன்று (செப்.17) அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$2,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை மேலும் 3 முதல் 8 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
Photo: SPF